சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது நடந்த வெடி விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சாத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலணியில் சூர்யா என்பவர் சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். பட்டாசு தயாரிப்பின் போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சூர்யாவின் வீடு தரைமட்டமாகி உள்ளது. மேலும் அருகில் இருந்த 5க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் ராஜா என்பவரின் மனைவி கற்பகம் மற்றும் அப்போலோ என்பவரின் மனைவி செல்வமணி ஆகியோர் உயிரிழந்தனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி அப்போலோவின் 5 வயது மகன் ரஃபியா சல்மாவும் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.







