சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் யஷ் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டிருந்தது. இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் இதுவாகும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது. இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதை பெற்றுக் கொண்டனர்.
கோல்டன் குளோப் விருதை வென்றுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படக் குழுவினருக்கு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கோல்டன் குளோப் விருதை வென்று தந்திருக்கும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். இளையராஜா வெளியிட்ட பதிவில், படக்குழுவினரின் கடின உழைப்புக்கு இந்த வெற்றி முழு தகுதியானது என்றும் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி, வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் யஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோல்டன் குளோப் விருதுடன் கீரவாணியை பார்ப்பதற்கு மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஆஸ்கர் வெல்வதற்கு ராஜமெளலிக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.