என்னை பற்றி அவதூறாக பேசுபவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை பாதிப்புகளுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கூறியதாவது:

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய மழை பாதிப்பிற்கு என்ன நிவாரணம் வழங்க கோரினாரோ? அதனை தற்போது வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3000 ரூபாய் மற்றும் விளைநிலங்களுக்கு ஏக்கர் 1 க்கு 30000 ரூபாய் வழங்க வேண்டும் என்றார்.
மேலும், மக்களால் புறக்கணிக்கப்பட்டு சுவர் ஏறி குதித்து ஓடியவர் ஓ.எஸ்.மணியன் என அமைச்சர் மெய்யநாதன் கூறியது தவறானது. அன்று நடந்தது என்ன என்பதை அறியாமல் பலர் தவறாக பரப்பினர். இவர்கள் இதனை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் .இப்படிப் பேசினால் அவர்கள் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வாய்க்குபூட்டு போடப்படும் எனத் தெரிவித்தார்.







