“போனா வராது, பொழுது போனா கிடைக்காது!” – 2000 ரூபாய் நோட்டு கொடுத்தால் ரூ.2100-க்கு இறைச்சி

2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை, டெல்லி வியாபாரி ஒருவர் தனது தொழிலுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து…

2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை, டெல்லி வியாபாரி ஒருவர் தனது தொழிலுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அத்தகைய நோட்டுகள் செப்டம்பா் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதுவரை அவற்றை வழக்கமான பணப் பரிவா்த்தனையில் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வங்கிகளுக்கு சென்று 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதை விட, பெட்ரோல் பங்குகளில், உணவகங்களில், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தி கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இதனால், பல நிறுவனங்களில், கடைகளில் தற்போது சில்லறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த சில்லரை நெருக்கடியை சிலர் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பாகவும் பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில், டெல்லியில் உள்ள ஒரு இறைச்சிக் கடை இந்த சமயத்தில் ஒரு மார்க்கெட்டிங் உத்தியைக் கையாண்டது. டெல்லியில் இயங்கி வரும் சர்தார் இறைச்சி கடையில், ”2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தால் அதைப் பெற்றுக்கொண்டு 2100 ரூபாய்க்கு இறைச்சி வழங்கப்படும்” என்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை, அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சுமித் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் இந்த பதிவில், ”ஆர்பிஐ புத்திசாலி என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் யோசியுங்கள். ஏனென்றால் டெல்லிவாசிகள் அதைவிட புத்திசாலிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் டெல்லி வாசிகள் தங்கள் கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடிவதால், இறைச்சி கடையில் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தக்க சமயத்தில் மாற்றி யோசித்ததால், தனது கடையை செலவு இல்லாமல் விளம்பரம் செய்ததுடன் வியாபாரத்தையும் குவித்து வருகிறார் கடையின் உரிமையாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.