Ex-Lover உள்ளவர்கள் மனைவியுடன் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கலாம் – ’தீராக்காதல்’ விமர்சனம்

அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களின் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா உள்ளிட்டோர் நடித்துள்ள தீராக்காதல் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்…. லைகா…

அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களின் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா உள்ளிட்டோர் நடித்துள்ள தீராக்காதல் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்….

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் கதை தான் தீராக்காதல். படத்தின் கதை மிகவும் சிம்பிளாக இருப்பதை போல் தோன்றினாலும், அதற்கு பின்னால் இருக்கும் வலிகளையும், உணர்வுகளையும் இயக்குனர் ரோஹின் மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் ஜெய் வேலை நிமித்தமாக கேரளா செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷை ஜெய் சந்திப்பார். கல்லூரி காலத்தில் இருந்த காதல் மீண்டும் புத்துயிர் பெற இருவரும் கேரளாவில் ஒன்றாக தங்களது நேரத்தை செலவு செய்வார்கள். ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் அவரை தினமும் கொடுமைப்படுத்துவதால் திருமண வாழ்க்கையின் மீது அவருக்கு விரக்தி ஏற்படும். தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை அன்பாக பார்த்துக்கொள்ள ஜெய் இருப்பார் என நினைத்து அவருடன் நெருக்கமாக பழக தொடங்குவார்.

ஒரு கட்டத்தில் இது தவறு என புரிந்துகொள்ளும் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை விட்டு விலகி செல்வார். இதனால் ஜெய்க்கு அழுத்தம் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது மனைவியை விவாகரத்து செய்ய வற்புறுத்துவார். இந்த பிரச்னையை ஜெய் எப்படி கையாண்டார். ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் உறவு என்ன ஆனது என்பது தான் தீராக்காதல் படத்தின் கதை.

இந்த படத்தில் கௌதம் என்ற கதாப்பாத்திரத்தில் ஜெய் நடித்துள்ளார். பகவதி, சென்னை 28 திரைப்படங்களில் தொடங்கி தற்போது தீராக் காதல் வரை ஜெய் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த முயற்சி செய்து வருகிறார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையனை போன்ற தோற்றம் அவருக்கு இருப்பதால் மிக எளிதில் அவரை நம்முடன் கனெக்ட் செய்து கொள்ள முடிகிறது.

சின்ன சின்ன விஷயங்களை கூட மிக நேர்த்தியாக நடித்துள்ளார். குறிப்பாக முன்னாள் காதலியை பார்த்த உடன் அவரின் முகத்தில் தெரியும் அந்த புத்துணர்வும் மனைவியை ஏமாற்றி விட்டோம் என்பதை புரிந்து கொள்ளும் போதும், மனைவியிடம் நடந்ததை விளக்க முயற்சி செய்யும் போது ஏற்படும் குற்ற உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரண்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பை பற்றி சொல்ல தேவையே இல்லை. அவ்வளவு இயல்பான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். மனைவியாக, காதலியாக, தோழியாக எல்லா இடத்திலும் வியக்க வைக்கிறார். குறிப்பாக தனது முன்னாள் காதலை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியையும், தன்னால் அவரது குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை புரிந்து கொள்ளும் இடங்களிலும் அவரது நடிப்பு மிக சிறப்பு. வில்லியைப் போல சில இடங்களில் வெளிப்படும் அவரது நடவடிக்கைகள் அசர வைக்கிறது.

நடிகை ஷிவதா, வந்தனா என்ற கதாப்பாத்திரத்தில் மிக இயல்பாக அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். மனைவியாக, அம்மாவாக மிக சிறப்பாக நடித்து அந்த கதாப்பாத்திரத்திற்கும் படத்திற்கு வலுசேர்த்துள்ளார். அதேநேரத்தில் தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை தெரிந்து கொள்ளும் இடங்களில் அவரிடமிருந்து வெளிப்படும் கோவம் மிக எதார்த்தம்.

இந்த படத்தின் மற்றொரு பிளஸ் என்றால் அது பேபி வ்ரித்தி விஷால் தான். சுட்டி குழந்தையாக அவரது நடிப்பு அசர வைக்கிறது. இந்த வயதில் இவ்வளவு திறமைகளா என வியந்து பார்க்கும் அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தால் நிச்சயம் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த படத்தின் மற்றொரு பிளஸ் என்றால் அது படத்தின் திரைக்கதை தான். இயக்குனர் இந்த படத்தை கொண்டு சென்ற விதமும் அதற்கு ஒரு காரணம். ஒரு ஸ்டெப் கதையில் மாற்றம் செய்திருந்தாலும் இது கள்ளக்காதலாக மாறி இருக்கும். அந்த அளவுக்கு ஒரு நுணுக்கமான கதையை அன்புக்காக ஏங்கும் ஒரு காதலியின் வலியையும் பதிவு செய்துள்ளார் இயக்குனர்.

மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான். அதை உணர்ந்து கொள்ளும் போது அந்த தவறை மாற்றி கொள்ள வேண்டும் என்பதையே இந்த படமும் பதிவு செய்துள்ளது. அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் போன்ற வரிசையில் மற்றொரு சிறப்பான படத்தை இயக்குனர் ரோஹின் கொடுத்துள்ளார். முக்கியமான ஒரு விஷயம் முன்னாள் காதலி உள்ளவர்கள் மனைவியுடன் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கலாம், இல்லை என்றால் ஒன்றும் செய்வதற்கு இல்லை…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.