“ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்” – டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரான் மீது இதுவரை இல்லாதவகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போரிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒத்துக்கொண்டதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது. இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரான் மீது இதுவரை இல்லாதவகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்த்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்த எதிரியை, கொன்று குவித்து அழிப்பதற்கு தேவையான மற்றும் பொருத்தமான அனைத்து அமெரிக்க கப்பல்கள், விமானங்கள், மற்றும் ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பிறவற்றுடன், எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் வரை ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவர்கள் (அமெரிக்க ராணுவம்) நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள்.

ஏதேனும் ஒரு காரணத்தால் அது நிறைவேற்றப்படாவிட்டால், (அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு), அப்போது, சிறந்ததாகவும், வலிமையானதாகவும் “துப்பாக்கிச் சூடு” தாக்குதல் தொடங்கப்படும். அணு ஆயுதத் தடை, ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கிடையில், நமது மாபெரும் ராணுவம் ஆயுதங்களை தயார் செய்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், தனது அடுத்த வெற்றியை எதிர்நோக்கி எங்கள் ராணுவம் இருக்கிறது. அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.