தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடர்ந்தால் ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பு- ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் கே.சி.பழனிசாமி மீது புகார் அளித்த பின் அதிமுக முன்னாள்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்ந்தால் திமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் கே.சி.பழனிசாமி மீது புகார் அளித்த பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத கே.சி.பழனிசாமி, அதிமுக கொடியை பயன்படுத்துவதோடு, பணம் பெறுதல் போன்ற மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது ஏற்கனவே சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக இருந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட மதத்தினருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் பேரணி நடத்த அனுமதி கொடுக்கவில்லை. திமுகவின் இரட்டை வேடத்தால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும், இதே நிலை தொடர்ந்தால் கடந்த காலத்தை போலவே திமுக ஆட்சி கலைக்கப்பட வய்ப்புள்ளது எனவும் அவர் பேசினார்.

குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக திருமாவளவன் எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும் என கூறிய ஜெயக்குமார், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே அதிமுகவின் எதிர்பார்ப்பு எனவும் கூறினார். ஓசி டிக்கெட் என சொல்லி பெண்களை அவமானப்படுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. திமுக அமைச்சர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.