மொழி சிதைந்தால் இனமும் அடையாளமும் சிதைந்து, தமிழர் என்ற அடையாளமே இல்லாமல் போய்விடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆண்டுதோறும் பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞர் தேவதேவன், எழுத்தாளர்கள் தேவி பாரதி, சந்திரா தங்கராஜ், சி.மோகன், நாடகக்கலைஞர் பிரளயன் ஆகியோருக்கு கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தையும் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த தமிழ்நாடு அரசு, 50 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாக தெரிவித்தார். புத்தகப் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதும் அது குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
மொழி சிதைந்தால் இனமும் அடையாளமும் சிதைந்து, தமிழர் என்ற அடையாளமே இல்லாமல் போய்விடும் என உணர்ச்சிப்பூர்வமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் என்ற அடையாளம் இல்லாமல் போய்விட்டால் நாம் வாழ்ந்தும் பயனில்லை என கூறினார். மொழியை காப்பதற்கான கடமை எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.







