வாரிசு VS துணிவு பொங்கல்…ஜெய்லர் VS இந்தியன் 2 தீபாவளி?…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் வெளியாக உள்ள வாரிசு, துணிவு படங்களின் மோதல் தமிழ் திரையுலகில் வசூலை பொங்கவிடுவதற்கு காத்திருக்கும் நிலையில், அடுத்து ஜெய்லர் மற்றும் இந்தியன் 2 படங்கள் ஒரே நேரத்தில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் வெளியாக உள்ள வாரிசு, துணிவு படங்களின் மோதல் தமிழ் திரையுலகில் வசூலை பொங்கவிடுவதற்கு காத்திருக்கும் நிலையில், அடுத்து ஜெய்லர் மற்றும் இந்தியன் 2 படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ரஜினி, கமல் ரசிகர்களை குதூகலிக்கவைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரங்களின் படங்கள் வெளியானாலே  திரையரங்குகள் திருவிழாக்கோலம் காணும். அதுவும் ஒரே நேரத்தில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகிறது என்றால் அந்த கொண்டாட்டங்களையும், பரபரப்புகளையும் பற்றி சொல்லவேத் தேவையில்லை. எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்- அஜித் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழ் திரையுலகில் இந்த மோதலும், கொண்டாட்டமும் தொடர்ந்தே வருகிறது.

1964ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த வேட்டைக்காரன்- கர்ணன் படங்களின் மோதல் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்களுக்கும், 1991ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த தளபதி-குணா படங்களின் மோதல் ரஜினி, கமல் ரசிகர்களுக்கும் இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.

அந்த வகையில் வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளி வருவது விஜய், அஜித் ரசிகர்களை இதுவரை இல்லாத ஒரு பரப்புக்குள்ளும், எதிர்பார்ப்புக்குள்ளும் கொண்டு வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வீரம் மற்றும் ஜில்லா படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்தின. அதன் பின் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து, அஜித், விஜய் ரசிகர்களிடையே மட்டுமல்ல தமிழ் திரையுலகையும், பரபரக்க வைத்துள்ளது வாரிசு, துணிவு படங்களின் மோதல்.

இரண்டு படங்களும் வெள்ளித்திரையில் நிழலாடுவதற்கு 6  மாதங்களுக்கு முன்பே சோஷியல் மீடியாக்களில் துணிவு, வாரிசு படங்களின் போட்டி தொடங்கியிருந்தது. அந்த போட்டி தற்போது உச்சக்கட்டத்தை எட்டி நிற்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொடங்கி டிரைலர் வெளியீடு வரை எல்லாமே போட்டா போட்டியாகி விஜய், அஜித் ரசிகர்களிடையே அனல் பறக்கிறது. வாரிசு, துணிவு படங்களின் ஆரோக்கியமான போட்டி திரையுலகத்தினரை உற்சாகமடைய வைத்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது.  பிரம்மாண்ட வசூலை குவித்த படங்கள் வரிசையாக வெளிவந்தன.  இந்நிலையில் 2023ம் ஆண்டும் தமிழ்திரையுலகிற்கு சிறப்பாக அமையும் என கணிக்கும் திரையுலகினர், வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் பொங்கல் விடுமுறை நாட்களில் திரையரங்குகளில் வசூல் பொங்கும் என மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர். அதே நேரம் இந்த போட்டியை தங்களின் குதூகலத்திற்கான கொண்டாட்டமாகவே விஜய், அஜித் ரசிகர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும், தங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் அவர்கள் காட்டக்கூடாது என்கிற அக்கறையையும் திரையுலகினர் வெளிப்படுத்துகின்றனர்.

துணிவு, வாரிசு படங்களின் மோதல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் களைகட்டுகிறது என்றால் ஆண்டின் மத்தியிலோ அல்லது இறுதியிலோ ரஜினியின் ஜெய்லர் படமும், கமலின் இந்தியன் 2 படமும் ஒரே நேரத்தில் வெளியாகி திரையரங்குகளை தெறிக்கவிடுமா என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ரஜினி, கமல் படங்கள் நேருக்கு நேர் மோதுவது ஒன்றும் புதிதல்ல கடந்த 48 ஆண்டுகளில் பலமுறை ஒரே நேரத்தில் வெளியாகி திரையரங்குகளை திருவிழாக்கோலம் ஆக்கியுள்ளன. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமலும்  திரையுலகில் உயரங்களை எட்ட எட்ட இருவரும் இணைந்து நடிப்பது முதலில் சாத்திமில்லாமல் போனது. பின்னர் இருவர் நடித்த திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதும் நிகழாமல் போனது.

கடைசியாக ரஜினி, கமல் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது கடந்த 2005ம் ஆண்டுதான். அந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ந்தேதி ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின. இதில் சந்திரமுகி படம் 800 நாட்களுக்கும் மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. மும்பை எக்ஸ்பிரஸ் தோல்விப் படமாக அமைந்தது. 2005ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 18 ஆண்டுகளில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து 10 படங்கள் வெளிவந்தன. இதே போல் ரஜினி கதாநாயகனாக நடித்து 10 படங்கள் வெளிவந்தன. ஆனால் இந்த காலகட்டங்களில் கமல், ரஜினி படங்கள் நேருக்கு நேர் மோதவில்லை.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரஜினி, கமல் படங்கள் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் படத்தில் நடித்து வருகிறார். அதே நேரம் லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். அரசியலில் இறங்கி மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கி நடத்தி வரும் கமல்ஹாசன் சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் சுறுசுறுப்பை காட்டி வருகிறார். அந்த சுறுசுறுப்பில் விளைந்த விக்ரம் படம் மெகா ஹிட் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம்,  உலகெங்கிலும் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, கடந்த ஆண்டு அதிக வசூலை குவித்த தமிழ் படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வசூலை ஜெய்லர் முறியடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் திரையுலகில் ரஜினி, கமல் இடையேயான ஆரோக்கியமான போட்டி மீண்டும் தலைதூக்கியுள்ளது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.

ரஜினியும், கமலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களது படங்களுக்கிடையே இருந்த ஆரோக்கியமான போட்டி தமிழ் திரையுலகை செழிக்க வைத்து வந்தது. இந்த சூழலில் மீண்டும் ரஜினி, கமல் படங்கள்  ஒரே நாளில் வெளியாகும் தருணம் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. ரஜினியின் ஜெய்லர் படமும்   கமல்ஹாசனின் இந்தியன் 2 படமும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது. இரண்டு படங்களும் இந்த ஆண்டுதான் வெளியாக உள்ளன. இந்நிலையில் வரும் மே மாதம் கோடை விடுமுறையிலோ, அல்லது தீபாவளி பண்டிகைக்கோ ஜெய்லர் மற்றும் இந்தியன் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு 18 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் அது இருதரப்பு ரசிகர்களையும் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே கொண்டுசெல்ல வைக்கும். திரையரங்குகளும் வசூல் மழையில் நனையும். கடந்த 18 ஆண்டுகளில் ரஜினியும், கமலும் தங்கள் நட்பின் ஆழத்தை பொதுவெளிகளில் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே அவர்களது ரசிகர்கள் அதனை புரிந்துகொண்டு ஜெய்லர், இந்தியன் 2படங்கள் ஒரே நேரத்தில் வெளிவந்தால்,திரையரங்குகளில் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாட்டங்களில்தான் ஈடுபடுவார்கள், பகைமையையும், வெறுப்பையும் காட்டமாட்டார்கள் என்கிற கருத்தும் நிலவுகிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.