முக்கியச் செய்திகள்தமிழகம்

கோயில் சொத்துகளின் வருவாயை வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்-சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டையே தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

கோயில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்புத் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக
முன்வந்து விசாரித்த வழக்கில், 75க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி
உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்திவிட்டதாகவும், 5
உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறுஆய்வு
செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று
விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்கறிஞர் அருண்
நடராஜன் ஆஜராகி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழமையான
கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான பணியில் கோயில்களின் செயல் அலுவலர்கள், பொதுப்பணித் துறையினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார். இருதுறை அதிகாரிகளும், கோயில்கள் புனரமைப்பிற்கான மாவட்ட
மற்றும் மாநிலக் குழுக்களின் ஆலோசனைபடி செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களுக்கான நிதி, ஒரு லட்ச ரூபாயில் இருந்து, 2
லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கோயில்களின் கணக்குகளை தணிக்கை
செய்ய தமிழக தணிக்கைத் துறை தலைவர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அருண் நடராஜன் தெரிவித்தார்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிலம் கண்டறியப்பட்டு வருவதாகவும், நாளொன்றுக்கு 2000 ஏக்கர் வீதம் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், சிலவற்றை மறு ஆய்வு செய்யக்கோரும் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், கோயில் புனரமைப்பு குழுக்கள் எடுக்கும் முடிவுகளை மற்ற
துறைகள் ஏற்க வேண்டும் என்றும், அறநிலையத்துறை பணிகளில் குழுக்கள் தலையிடாது
என்றும் தெரிவித்தனர். புனரமைப்புப் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அல்லது செயல் அலுவலர்கள் நேரடியாக ஈடுபடவில்லை என்பதை உறுதிசெய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். கணக்குத் தணிக்கைக்கு ஒரே ஒருவர் தலைமையில் மற்ற 5 அலுவலர்கள் கொண்ட குழு போதாது என்றும், குறைந்தபட்சம் குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டுமென அரசிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

மேலும் நீதிபதிகள் தெரிவித்ததாவது:
அறநிலையத்துறை கோயில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது. அப்படிப்பட்ட
இணையதளங்களை முடக்க வேண்டும். அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் இதுபோன்ற புகாரில் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் தொடர்ந்து தெரிவித்ததாவது:
கோயில் நிலங்கள் மீட்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது. ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றவும், கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும், தர மறுத்தால் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்கவும் அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அங்கீகரிக்கப்படாத குத்தகைகள் இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வருகிறது. அவற்றின் மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்று கூறிய நீதிபதிகள் இதுதொடர்பான விசாரணையை மூன்று வாரங்ளுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

Web Editor

3வது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும்: ஜி.கே.வாசன்

Halley Karthik

இலங்கையில் கடும் பஞ்சம்: கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading