ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை குறித்து ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் தொலைபேசியில் ஆலோசித்துள்ளனர். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், சர்வதேச…

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை குறித்து ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் தொலைபேசியில் ஆலோசித்துள்ளனர்.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், சர்வதேச அளவில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உக்ரைனில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையும், ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணையை வெளிச் சந்தையில் வழக்கமான அளவில் விற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த போர், இவ்விரு நாடுகளையும் தாண்டி, சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

போர் தொடர்ந்தால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அதோடு, கடந்த ஆண்டு டிசம்பரில் புடின் இந்தியா வந்தபோது ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தங்களின் நிலை குறித்தும் இரு தலைவர்களும் ஆராய்ந்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டில் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் 4வது தொலைபேசி உரையாடல் இது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிப்ரவரி 24ம் தேதி, அது குறித்து புடின் மோடியிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இதனை அடுத்து, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்பது தொடர்பாக மார்ச் 2 மற்றும் மார்ச் 7 தேதிகளில் பிரதமர் மோடி, அதிபர் புடினிடம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.