தொழில் பூங்காக்களை அமைக்க நிலம் கையகப்படுத்தும் போது, விவசாயிகள் பாதிக்காத வகையில் கையகப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கடந்த 18,19 தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பட்ஜெட் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் நடந்துவருகிறது. இந்த பொது விவாதத்தின் கடைசி மற்றும் 4ம் நாளான இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு விடையளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முன்னேறுவதற்காக நில வங்கி உருவாக்க வேண்டும் எனவும், கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் தொடங்க ஏற்ற இடமாக உள்ளதாகவும் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் தொழிற்சாலைகள் வந்துகொண்டிருப்பதாகவும், தொழில் பூங்காக்கள் அமைக்க வேண்டியது அரசின் அவசியமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொழில் பூங்காக்களை அமைக்க நிலம் கையகப்படுத்தும் போது, விவசாயிகள் பாதிக்காத வகையில் கையகப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்ற தங்கம் தென்னரசு, விவசாயிகள் இடம் தர முன்வந்தால் அதை அரசு பெற்றுக் கொள்ளும் என்றும் பேசியுள்ளார்.







