அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை நடிகர் விஜய் மேற்கொண்டு வருவதாகவும், அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழி, விளையாட்டு, இதழியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைகைச் செல்வன், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிவந்தி ஆதித்தனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, இதழியல் உலகில் வேந்தனாகத் திகழந்த சிவந்தி ஆதித்தனாரின் நினைவைப் போற்றுவதில் பெருமை கொள்வதாக கூறினார். விஜய் மக்கள் இயக்கத்தினர் தற்பொழுது தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள்களில் மரியாதை செலுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.







