கர்நாடகா மாநிலம் நெலமங்கலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஐசியூ படுக்கையை ரூ. 1.20 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை மத்திய பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய போலீசார், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மிதேவம்மா என்ற நோயாளி நெலமங்கலாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் ஜலஹள்ளி கிராஸ்-கோரகுண்டேபல்யாவிற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் படுக்கை எதுவும் இல்லை என ஊழியர்கள் கூறியுள்ளனர். அவரது மகன் படுக்கை இருப்பு குறித்து விசாரித்தபோது, அம்மருத்துவமனையில் பணியாற்றிய இதய நோய் வல்லுநர் வேங்கட சுப்பாராவ் மற்றும் செய்தி தொடர்பாளர் மஞ்சுநாத் சந்துரு ஆகியோர் வேரொரு தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்தால் ஐசியூ இருக்கை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்” எனக் கூறினர்.
பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை வேரொரு மருத்துவமனையில் அனுமதிக்க, அவரது மகனிடம் ரூ. 1.20 லட்சம் கேட்டுள்ளனர். அவர் கூகிள் பே மூலம் 50,000 மற்றும் 70,000 ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு லக்ஷ்மிதேவம்மாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவசர உதவி தொலைப்பேசி எண்ணான 112யை அழைத்து இதுகுறித்து தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.







