பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்!

உடல் மொழியால் மக்களை மகிழ்வித்த நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார். நடிகராக மட்டுமின்றி, ஓவியக் கலைஞராகவும் திகழ்ந்த அவர், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கொடியையும் வடிவமைத்தவர். நடிப்பின் இலக்கணத்தை உடைத்தெறிந்த இந்த உணர்வு…

உடல் மொழியால் மக்களை மகிழ்வித்த நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார். நடிகராக மட்டுமின்றி, ஓவியக் கலைஞராகவும் திகழ்ந்த அவர், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கொடியையும் வடிவமைத்தவர். நடிப்பின் இலக்கணத்தை உடைத்தெறிந்த இந்த உணர்வு வெளிப்பாட்டுக்குச் சொந்தக்காரர்… வசன உச்சரிப்பைக் கடந்து தனது உடல்மொழியால் மக்கள் மனதில் நிலைத்து நின்ற நடிகர்களுள் முக்கியமானவர் பாண்டு.

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றாக திகழும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தினையும், அறிஞர் அண்ணா உருவம் பொறித்த அதிமுக கொடியையும் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின்படி உருவாக்கிய பாண்டு இன்று நம்மை விட்டு பிரிந்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையத்தில் 1947-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் நாள் பிறந்தார் நடிகர் பாண்டு. நகைச்சுவை நடிகர் இடிச்சப்புளி செல்வராஜின் சகோதரரான இவர், தனது சிறு வயது முதலே ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். 8-ம் வகுப்பில் தொடங்கிய இவரது ஓவியப்பயணம், சென்னை ஓவியக்கல்லூரியில் வண்ணம்பெற்று, பரோடாவில் மெருகேறி, பிரான்சில் உள்ள பாரீசில் பட்டயப்படிப்பாக பட்டை தீட்டப்பட்டது. தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக ஓவியத்தில் பட்டயப்படிப்பை முடித்தவர் என்ற பெருமைக்குரியவர் பாண்டு.

படித்துக்கொண்டிருக்கும்போதே பத்திரிகைகளுக்காக ஓவியம் வரைந்துவந்த பாண்டு, 1975-ல் சென்னை வந்ததும் ‘கேபிடல் லெட்டெர்ஸ்’ எனும் பெயர்ப் பலகை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். 1977-ல் ஓவியர் குமுதாவை திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கினார் பாண்டு. செட்டிநாடு அரண்மனையில் தஞ்சாவூர் ஓவியம் கற்றுக்கொண்டு அதில் வல்லவராக திகழ்பவர்தான் குமுதா. குவைத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டிக்கு பாண்டு – குமுதா தம்பர்தியினர்தான் தலைமை தாங்கினர். இருவருக்கும் பிரபு, பஞ்சு, பிண்டு என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.

1970-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான மாணவன் திரைப்படத்தில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய பாண்டு, என் உயிர் கண்ணம்மா, சின்னத் தம்பி, ரிக்சா மாமா, உள்ளிட்ட 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கில்லி படத்தில் ‘நெருப்பு மாதிரி இருந்தான் சார்’ என இவர் பேசிய வசனம் இளைஞர்கள் மனதில் காட்டுத்தீயாய் பரவியது.

சிங்கம் படத்தில் ‘சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்’ என்று ஒரு வசனம் வரும்; படம் முழுவதும் நீளும் அவரது கேள்வி இன்றுவரை நம் அனைவர் மனதிலும் நிலைத்திருக்கிறது. தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் என நடிப்பில் உச்சத்தை தொட்ட பாண்டு, தனது ‘கேபிடல் லெட்டெர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்துள்ளார். அண்ணா அறிவாலயம், அண்ண பல்கலைக்கழகம் தொடங்கி பிரபலமான பல நிறுவனங்களின் பெயர் பலகைகளில் நிலைத்திருக்கும் கலைநயத்திற்கு சொந்தக்காரர் பாண்டு.

கடந்த சில தினங்களுக்கு முன் பாண்டுவும் அவரது மனைவி குமுதாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று காலை நடிகர் பாண்டுவின் உயிர் பிரிந்தது. தனது உடல்மொழியின்மூலம் உலகை ரசிக்கவைத்த கலைஞனின் மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். உயரப்பறக்கும் அதிமுக கொடியை, இரட்டை இலை சின்னத்தை, தவிர்க்கமுடியாத நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம், பாண்டு எனும் கலைஞனின் புகழ் நிலைத்திருக்கும்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.