மதுரையில் கூலித் தொழிலாளி ஒருவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, சோளங்குருணி பகுதியைச் சேர்ந்தவர் வீரணன். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் காளவாசல் ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சோளங்குருணி நெல் களம் பகுதியில் தனது நண்பர்களுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீரணன்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வீரணனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த வீரணனை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் இறந்தவரின் நண்பர்களிடம் மர்ம கும்பலின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







