“எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறேன்!” – அமைச்சர் வன்னி அரசு

முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று பேசிய மார்க்கண்டேயன் மீது சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

சமூகநீதித் துறை அமைச்சரும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.

ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.