மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக எம்பிக்கள் போராட்டம்!

மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வாயிலில் திமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்கிய உடனே நீட் வினாத்தாள் கசிவு , மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபப்பட்டதால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்து நாடாளுமன்ற வளாகத்தில் மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி பச்சை துண்டு அணிந்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை வஞ்சிக்காதே உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.