ஜப்பானின் ஆய்ச்சி–நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் இந்தியா இதுவரை இல்லாதஅளவுக்கு 114 பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த தொடரில் வென்ற 108 பதக்கங்களைத் தாண்டி, உலகச் சாதனைகள், வரலாற்று வெற்றிகள் என இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்கள் திறமையை உலகுக்கு நிரூபித்துள்ளனர்.
மொத்தம் 168 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் எனப் பதக்க வேட்டையை நிகழ்த்தியுள்ளது. முந்தைய தொடரில் 309 வீரர்கள் பங்கேற்று 108 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் இந்த முறை இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
100 பதக்கங்களைக் கடந்து 114 பதக்கங்களை வென்றது இந்திய பாரா விளையாட்டுத் துறைக்குப் பெருமையான தருணம் என்று இந்திய பாராலிம்பிக் கமிட்டித் தலைவர் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்துள்ளார். வீரர்களின் அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் விடாமுயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
பாரா பேட்மிண்டனில் தங்க வேட்டை!
பாரா பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய வீரர்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்தனர். ஆண்கள் ஒற்றையர் SL3 பிரிவு இறுதிப்போட்டியில், பாராலிம்பிக் சாம்பியனான நிதேஷ் குமார், உலக சாம்பியனான சக இந்திய வீரர் பிரமோத் பகத்தை 21-18, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் இப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி என இரட்டை வெற்றி கிடைத்தது.
பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் துளசிமதி முருகேசன், மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி இணை, சீனாவின் யாங் கியூஷியா–சியாவோ சூசியான் ஜோடியை 21-16, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் துளசிமதி வெள்ளிப் பதக்கத்தையும், SH6 பிரிவில் நித்யா ஸ்ரீ சுமதி சிவன் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
வில்வித்தையில் முதல் பதக்கம்!
பாரா வில்வித்தை ஆண்கள் ரிகர்வ் இரட்டையர் பிரிவில் ஹர்விந்தர் சிங், அறிமுக வீரர் விஜய் சுண்டி ஜோடி தங்கம் வென்றது. பெண்கள் ரிகர்வ் இரட்டையர் பிரிவில் பூஜா ஜாத்யான், பவ்னா சௌத்ரி ஜோடி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ரிகர்வ் இரட்டையர் பிரிவில் இந்தியா தனது முதல் பதக்கத்தைப் பெற்றது.
தடகளத்தில் உலகச் சாதனைகள்!
ஈட்டி எறிதல் F37/38 பிரிவில் ஹனேய் 60.49 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றதுடன், T37 பிரிவில் உலகச் சாதனையையும் படைத்தார். ஆண்கள் 400 மீட்டர் T64 பிரிவில் அறிமுக வீரர் சந்தீப் 52.28 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் T44 பிரிவுக்கான உலகச் சாதனையையும் அவர் பதிவு செய்தார். இதே பிரிவில் அஜய் குமார் வெண்கலம் வென்றார்.
ஆண்கள் ஈட்டி எறிதல் F42-F44/F61-F64 இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் மூன்று பதக்கங்களையும் கைப்பற்றி சாதனை படைத்தனர். சுமித் 72.46 மீட்டர் தூரம் எறிந்து 1,112 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மகேந்திர குர்ஜார் 59.03 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளியும், சந்தீப் சஞ்சய் சர்கார் 64.48 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் வென்றனர். இருவரும் தங்களது பிரிவுகளில் போட்டி சாதனைகளைப் பதிவு செய்தனர்.
ஆண்கள் கிளப் த்ரோ F51 பிரிவில் பிரணவ் சூர்மா 32.87 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். இதன்மூலம் முந்தைய 29.47 மீட்டர் போட்டி சாதனையை முறியடித்தார். தரம்பீர் வெண்கலம் வென்றார். ஈட்டி எறிதல் F40/41 பிரிவில் நவ்தீப் சிங் வெண்கலமும், 200 மீட்டர் T37 பிரிவில் ராகேஷ்பாய் பட் வெண்கலமும் கைப்பற்றினர். சந்தீப் 100 மீட்டர் T44 பிரிவிலும் வெண்கலம் வென்று, ஒரு தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் உலகச் சாதனையுடன் தனது தொடரை நிறைவு செய்தார்.
துப்பாக்கிச் சுடுதலில் புதிய மைல்கல்!
பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் SH1 பிரிவில் மோனா அகர்வால் 357.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இதன்மூலம் உலகச் சாதனை மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சாதனையைப் படைத்தார். மேலும், இந்தப் பிரிவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாரா துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
டேபிள் டென்னிஸ், நீச்சலிலும் பதக்கங்கள்!
பாரா டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் MD4 பிரிவில் ஜெஹான் டோராப் மதன், சுபம் வாத்வா ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றது. 50 வயதான மதன், இந்தத் தொடரில் பதக்கம் வென்ற இந்திய அணியின் வயதில் மூத்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.
பாரா நீச்சல் ஆண்கள் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் S11 பிரிவில் ஹிமான்ஷு நந்தல் 1 நிமிடம் 5.90 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தத் தொடரில் அவர் தனது மூன்றாவது வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
பாரா தடகளம், பேட்மிண்டன், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ், நீச்சல் எனப் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் தங்கள் முத்திரையைப் பதித்தனர்.
ஜப்பானின் நகோயாவில் இன்று நடைபெற உள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மோனா அகர்வால் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் இந்தியாவின் கொடியேந்திகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 114 பதக்கங்களுடன் இந்தியா தனது சிறந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டித் தொடரைப் பதிவு செய்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் களமிறங்கி, உலகச் சாதனைகளையும் வரலாற்று வெற்றிகளையும் படைத்த இந்திய வீரர்களின் சாதனை, நாட்டின் பாரா விளையாட்டுத் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2030-ஆம் ஆண்டில் கத்தாரின் தோஹாவில் நடைபெறுகிறது.




