’மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்’ – அமைச்சர் உதயநிதி அறிக்கை

அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்…

அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது அமைச்சரவையில் எனக்கு இடமளித்து, கடமையாற்றப் பணித்துள்ளார். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு என் பணியைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வேன்.

இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். ‘விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்’ என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்.

அமைச்சராக பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் என்னை உச்சிமுகர்ந்து வாழ்த்த முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் தாத்தாக்கள் அருகில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம். அவர்களின் மறுஉருவாக வாழும் மாண்புமிகு முதலமைச்சர், கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள், என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மக்கள் இளைஞர் அணியினர், தமிழ் மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன். அன்பும் நன்றியும்!”. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.