தமிழக அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைமைச்செயலகம் வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் இருக்கையில் அமர வைத்தனர். இருக்கையில் அமர்ந்து அலுவலக பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். மேலும் மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைநட்சத்திரங்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.