தமிழ்நாட்டில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பேசியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முதலமைச்சராக பதவியேற்ற பின் அவர் பங்கேற்கும் முதல் கிராம சபை கூட்டம் இதுவாகும். அவருடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஒச்சாண்டம்மன் பெரிய கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டு கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பாப்பாபட்டி கிராமத்தை முதலமைச்சர் நேரடியாக தத்தெடுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், “பாப்பாபட்டி மக்களை சந்திப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனாவால் கிராம சபை கூட்டங்கள் 2 ஆண்டுகளாக நடத்த முடியவில்லை.
நாட்டையே கிராம சபை ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என காந்தியடிகள் நினைத்தார். மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. இந்த மண்ணின் நிலையைக் கண்டுதான் காந்தி தனது மேலாடையை துறந்தார்.
இதே மண்ணில் 2006ம் ஆண்டு ஊராட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அசோக் வர்த்தன் ரெட்டி, உதயசந்திரன் ஆகிய 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் தேர்தலை நடத்த முயற்சி எடுத்தார்கள்.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதியில் 202 வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது. சொல்லாத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றியுள்ளோம்.
திமுக சாமானிய மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறது. இது எனது அரசு அல்ல, நமது அரசு. கடைகோடி மனிதனின் குரலையும் கேட்டு, மாநிலத்தில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன்.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“பாப்பாபட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும். அங்கன்வாடி கட்டடம், மயான கட்டடம், கதிர் அடிக்கும் களம், தெருவிளக்கு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்டவைகள் அமைக்கப்படும்.
பாப்பாபட்டியில் செய்யப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வாரம் ஒரு முறை நான் தொலைபேசியில் கேட்டு விபரங்களை தெரிந்து கொள்வேன். தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உருவாக மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.” என்று கூறி தனது உரையை முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்திற்கு முதல்வரின் வருவதையொட்டி தென் மண்டல ஐ.ஜி தலைமையில் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டனர்.








