முதுமலையையொட்டியுள்ள மசினகுடி பகுதியில் முகாமிட்டுள்ள புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்டப்டுள்ளன.
கடந்த சில நாட்களாக சில கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி கொன்றுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நாட்களை கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து புலியை பிடிக்கும் பணி மும்முரமாக்கப்பட்டது. ஆனால், இதில் பல சிக்கல்கள் மேலெழுந்த நிலையில் அதனை சுட்டுப்பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாப்பு அலுவலர் சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ராணா என்ற மோப்ப நாய் உதவியுடன் வனத்துறையின் மூன்று குழுக்களாக பிரிந்து புலியை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதுமலை வன சரகத்தின் கள இயக்குநர் வெங்கடேஷ், “மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் பணியானது கடந்த சில நாட்களாக நடைபெற்றது. மற்ற புலிகள் போல் இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. வனப்பகுதியொட்டிய இடங்களிலே இந்த புலி சுற்றி வருகிறது.
இவ்வளவு நாட்களாக தேயிலை தோட்டத்தில் இருந்ததால் புலியைக் பிடிப்பது சவலாக இருந்தது. தற்போது மசினகுடியை சுற்றியுள்ள பகுதி சமதள பகுதியில் சுற்றித்திரிவதால் ஆப்ரேஷன் எளிதாக அமையும் என்று நினைக்கிறோம்.
எந்தெந்த வகையில் புலியைக் பிடிக்க முடியுமோ அந்தவகையில் முயன்று வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
புலியை சுடுவதற்காக 305, 315, AK 47 என மூன்று ரக துப்பாக்கிகளை அதிரடி படையினர் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பு கருதி மசினகுடி – தெப்பாகாடு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புலியின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.











