ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுடன் என் கொள்கைகள் ஒத்து போகாது. எனது உயிரே போனாலும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்ல மாட்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டி முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி எம்பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த ஒற்றுமை நடைபயணம் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை பஞ்சாப் மாநிலம் ஹோஷிப்பூரில் தனது நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் சில விஷயங்களை வருண் காந்தி ஏற்று கொண்டுள்ளார். ஆனால், அந்த கருத்துக்களுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லவே மாட்டேன். அவ்வாறு நான் செய்வதாக இருந்தால், அதற்கு முன் நான் என் தலையை துண்டித்து கொள்வேன்.
என் உயிரே போனாலும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கால் வைக்க மாட்டேன். எனது குடும்பத்துக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அதற்கென ஒரு சிந்தனை முறை உள்ளது.என்னால் நிச்சயமாக அவரை சந்திக்க முடியும், அரவணைக்க முடியும். ஆனால் ஒருபோதும் அந்த சித்தாந்தங்களோடு ஒத்துப்போக முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நடைபயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடு நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ராகுல், நடைபயணத்தில் இணைந்த அனைவரும் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கட்டிப்பிடிக்க வந்தவர், என்னைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டார். அவ்வளவுதான் என ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.







