திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகளை கடந்துள்ள இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான், நடிப்பில் இருந்து ஒரு போதும் ஓய்வுபெறப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தன. இதனால் இவர் தனது மார்க்கெட்டை இழந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து மாபெரும் வெற்றியை பெற்றது.
குறிப்பாக உலக அளவில் கவனம் ஈர்த்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்த பாகுபலி, கேஜிஎஃப்-2 ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து ரூ.1000 கோடியை நெருங்கியுள்ளது. அப்பேற்பட்ட இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பதான் படத்தின் வெற்றி கொண்டாட்டத்திலும், புதிய படத்தில் நடித்து வரும் மகிழ்ச்சியிலும் இருக்கும் ஷாருக்கான் தனது ரசிகர்களிடம், #AskSRK என்ற ஹேஸ்டேக் மூலம் தன்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றால் கேளுங்கள் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி ஷாருக்கானின் ரசிகர்கள் பலர் ஏராளமான கேள்விகளை முன்வைத்திருந்தனர்.
அதில், முக்கியமாக ஒரு ரசிகர் உங்கள் ஓய்வுக்கு பின் பாலிவுட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார்? என நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை ஷாருக்கானிடம் கேட்டிருந்தார். அந்த கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், நடிப்பதில் இருந்து நான் ஒரு போதும் ஓய்வுபெறப்போவதில்லை. என்னை வேலையை விட்டு தூக்கினாலும், நான் அதை விட மிக வேகமாக திரும்பி மீண்டும் வருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/iamsrk/status/1627583119875514372?s=20
மேலும் எந்த மாதிரியான திரைப்படங்களில் நடிக்க விருப்பம் என கேட்டுள்ளீர்கள். என்னை திரையில் பார்ப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே ஏன் விருப்பம். ஒரு நடிகனாக நான் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக நினைக்கிறேன்.
தற்போது “ஜவான்”, “டுன்கி” ஆகிய இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த படங்களை தவிர வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. புதிய கதைகளையும் இன்னும் கேட்கத் தொடங்கவில்லை. நான் நடித்துக்கொண்டிருக்கும் இரண்டு படங்களும் திரைக்கு வந்து அவற்றை பார்த்து ரசித்த பிறகே மற்ற படங்கள் குறித்து முடிவு செய்வேன். எனது ஒவ்வொரு படங்கள் குறித்த அறிவிப்பையும் நானே உங்களுக்கு சொல்வேன்.அதுவரை காத்திருங்கள். தேவையில்லாத வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.











