விருமன் படம் மண் சார்ந்த படம் என்றும், யார் மனதும் கஷ்டப்படும் அளவிற்கு படம் எடுக்க மாட்டேன் என்றும் இயக்குநர் முத்தையா உருக்கமாக பேசியுள்ளார்.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, நடிகை அதிதி, இயக்குனர் முத்தையா, ராஜ் கிரண் மற்றும் சூரி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன், எல்லாரையும் ஒன்றாக அரவணைத்து கொண்டு உறவுகளுக்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த படத்தின் கதை என்றார்.
இயக்குனர் முத்தையா பேசும்போது, தொடர்ந்து மண் சார்ந்த படங்கள் தான் எடுத்து வருகிறேன். எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். உறவுகளை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். பாசம் தான் ஒரு மனிதனை கட்டுப்படுத்தும் என நினைக்கிறேன். அதை தான் நான் பதிவு செய்து வருகிறேன் என்றார்.
விருமன் படமும் அப்படி எடுக்கப்பட்டது தான் என்றார். இது ஒரு உண்மை சம்பவம். என் வீட்டு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து தான் இந்த படம் எடுத்துள்ளேன் என கூறினார். தன்னுடைய படங்களில் செட் எதுவும் போட்டது கிடையாது. ஆனால் இந்த படத்தில் சில காட்சிகள் செட் போட்டு எடுத்துள்ளோம்.
தனக்கு சிட்டி தொடர்பான படங்கள் பண்ண ஆசை தான். தவறாக நான் படம் எடுக்க மாட்டேன். யார் மனதும் கஷ்டப்படும் அளவிற்கு படம் எடுக்க மாட்டேன். அதில் உறுதியாக உள்ளேன் என இயக்குநர் முத்தையா தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








