தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படும் முதல்வர் அலுவலகத்திற்கான டெண்டர்களில், ஏகப்பட்ட விதிமீறல்கள் இருப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
தலா ரூ.2.41 கோடி, ரூ.2.01 கோடி மற்றும் ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில், ஏ, பி, சி என மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய 3 டெண்டர்களுக்கான அறிவிப்பு, கடந்த 13-ஆம் தேதியே தினசரி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுவிட்டது. விதிகளின் படி அடுத்த நாளே இணையத்திலும் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், நான்கு நாட்கள் கழித்து 17 ஆம் தேதி தான் டெண்டருக்குரிய ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எதற்கு இந்த காலதாமதம்? அதிலும், இணையத்தில் பதிவேற்றப்பட்ட டெண்டர் ஆவணங்களில் மதிப்பீடுகள் குறித்த விவரங்கள் எதுவும் இடப்பெறாதது ஏன்?
“நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்” என்று கூறிக் கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய் இந்த டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்காதது ஏன்? ரூ. 2 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க, 30 நாட்கள் வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்த டெண்டர்களுக்கு மட்டும் எதற்காக வெறும் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது? ஒப்பந்ததாரர் யார் என்பதை முடிவு செய்வதற்குள்ளாகவே, எதன் அடிப்படையில் கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டன? டெண்டர் குறித்த இக்கேள்விகள் எல்லாம் வீண் வதந்திகள் என்று சட்டசபையில் கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதற்கான ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




