வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாட்டில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் உடல்நலனைப் பாதுகாக்கவும் சிறப்பு வசதிகளுடன் கூடிய ‘யானை மருத்துவமனைகளை’ அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் கடத்தல், யானைகள் வளர்ப்பை முறைப்படுத்தல், பராமரித்தல், மறுவாழ்வு, சிகிச்சை வழங்குதல், உள்ளிட்டவை தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபர்ணா பட் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாடு முழுவதிலும் தனிநபர்களிடம் 1,678, வனத்துறையிடம் 786, மறுவாழ்வு மையங்களில் 358, கோவில்களில் 96, உயிரியல் பூங்காக்களில் 63 மற்றும் சர்கஸ்சில் 47 யானைகள் இருப்பதாக தெரிவித்தார். யானை வீட்டு விலங்குகள் அல்ல, மாறாகப் பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்கு ஆகும். வளர்ப்பு யானைகளை மீண்டும் காட்டில் விடுவது தொடர்பான யோசனையை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் வளர்ப்பு யானைகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும், அவற்றை துன்புறுத்தக்கூடாது எனவே இதற்கான ஒரு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது கேரளா கோயில் சங்கம் மற்றும் யானை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.பரமேஸ்வர் ஆஜராகி, கேரளாவில் கோயில்களில் யானைகளை வளர்க்கும் முறை சர்கசில் வளர்க்கப்படுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

கோயில்களில் யானைகளை தெய்வமாக வழிபடுகிறோம், யானைகளை பராமரிப்பதிலும் அதீத கவனம் செலுத்துகிறோம் என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை பொறுத்தவரை, வழிபாட்டு உரிமைகளுக்குள் செல்லாமல், யானைகளின் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாக வைத்து உத்தரவை பிறப்பிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வளர்ப்பு யானைகளை அதன் உரிமையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டாயம் பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டும். இதற்காகச் சிறப்பு வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வளர்ப்பு யானைக்கும் தனித்துவமான மருத்துவக் குறிப்பேடு பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் வழக்கமான சிகிச்சைகள் வழங்கப்படுவதைக் கண்காணிப்புக் குழு உறுதி செய்ய வேண்டும். நாட்டில் சுமார் 2,700-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ள நிலையில், அவற்றின் சட்டவிரோத இடமாற்றத்தைத் தடுக்க ‘டி.என்.ஏ ப்ரொஃபைலிங்’ செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த விரிவான அறிக்கையை ‘யானைகள் திட்டத்தின்’ கீழ் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இறுதியாக வழக்கை ஒத்தி வைக்கும்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், கேரளா கோயில் சங்கம் மற்றும் யானை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பரமேஸ்வரை நோக்கி, யானையை வழிபடும் நீங்கள், அதைச் சரியாகப் பராமரிக்கவும் வேண்டும் உங்களின் செயல்பாடு நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.