அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தேர்தலுக்கு முன்பாக தனியார்மயத்திற்கு எதிராக குரல் எழுப்பிய தவெக, ஆட்சிக்கு வந்தவுடன், அதே தனியார்மயமாக்கும் முறையை பின்பற்றியிருப்பதோடு, அந்த ஒப்பந்தத்தை உத்திரபிரதேச மாநிலம் ரபேரலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க முன்வந்திருப்பது தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன மாற்றமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பல ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப துளியளவும் நடவடிக்கை எடுக்காத தவெக அரசு, அரசுப் பேருந்துகளுக்கு குத்தகை அடிப்படையில் நடத்துனர் நியமனம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது வேலைக்காக காத்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய போக்குவரத்துத்துறையில் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாத நிலையில், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் குத்தகை அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கு தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
எனவே, மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதற்கு உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, போக்குவரத்துத்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




