சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லுமா என்பது ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன்ஸ் என்பதால் கெத்தாக ஐபிஎல் பிளே ஆஃப்க்குள் நுழைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், வழக்கம்போல ரசிகர்கள் கால்குலேட்டரும் கையுமாக பிளே ஆஃப்க்குள் செல்லுமா என கணக்குப் போட்டுக் கொண்டுள்ளனர். சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே நிறைய தோல்விகளைச் சந்தித்தது. இதனால், தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனான முதல் போட்டியிலேயே சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். இதனால், சிஎஸ்கே அணி பிளே ஆஃப்க்குள் செல்லும் வாய்ப்பு சற்றே மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
சென்னை அணி இதுவரை ஆடியுள்ள 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றுள்ளனர். இன்று ஆர்சிபி அணியுடன் மோதவுள்ள போட்டியுடன் சேர்த்து மொத்தம் 5 போட்டிகள் உள்ளன. இந்த 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் சென்னைக்கு பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். அது சற்றே அசாத்தியமான விஷயம்தான். ஆனால், கடந்த காலங்களில் இதுபோன்ற அசாத்தியமான விஷயங்களைச் செய்ததால்தான் சென்னை அணி சாம்பியனாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
2011ஆம் ஆண்டு இதேபோல சீசனின் தொடக்கத்தில் நிறைய தோல்விகளைச் சந்தித்து சிஎஸ்கே அணி. 2ஆம் பாதியில் இருந்து அடுத்தடுத்து தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து சாம்பியன் பட்டமும் வென்றது. அதேபோல, இரண்டு ஆண்டுகள் தடையில் இருந்து மீண்டு 2018இல் மீண்டும் கம் பேக் கொடுத்தபோது, “டாடிஸ் ஆர்மி” என்று சென்னை அணியை அனைவரும் கலாய்க்கவே செய்தனர். ஆனால், அந்த ஆண்டும் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தோனி கேப்டன் பதவியை ஏற்றிருப்பதாலும், அணியில் ஏற்பட்டுள்ள சிலசில மாற்றங்களாலும் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
ருத்துராஜ், கான்வே கடந்த போட்டியில் அசத்தியதால் ஓப்பனிங்கில் நம்பிக்கை கிடைத்திருக்கிறது. உத்தப்பா, ராயுடு, தோனி போன்ற அனைவருமே நல்ல ஃபார்மில் உள்ளனர். ஜடேஜா மீண்டும் ஃபார்முக்கு வந்து, மொய்ன் அலி மற்றும் பிராவோ காயங்களில் இருந்து மீண்டு வந்தால் சென்னை அணியைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும்.
இதனால்தான் வீரேந்திர சேவாக் போன்ற ஜாம்பவான்கள் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறிவருகின்றனர். தற்போதைய சூல்நிலையைப் பொறுத்தவரை 10 அணிகள் மோதுவதால் பிளே ஆஃப்க்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
புது வரவுகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு மும்பையைத் தவிர மற்ற 7 அணிகளும் கடுமையாக மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் கடைசி 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர். பெங்களூர் அணி கடைசி 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சென்னையைப் போலவே பஞ்சாப் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுமே வெற்றிப் பாதைக்குத் திரும்பி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்துள்ள போட்டிகளில் மூன்றில் வெற்றிகளைப் பதிவு செய்துவிட்டால் மற்ற அணிகளின் வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். போட்டி கடுமையாக இருப்பதால் நெட் ரன் ரேட்டும் மிகவும் அவசியம். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் சென்னை அணியின் நெட் ரன் ரேட்டும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. தவிர சென்னை அணியின் பேட்டிங், ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது.
ஒரு போட்டியில் தோற்றால்கூட சென்னையின் நிலைமை மிகவும் கஷ்டமாகிவிடும்.ஆனால், கடந்த கால ஐபிஎல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மற்ற அணிகளைவிட அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஒரே அணி சென்னைதான். இதுவரை அந்த அணியை பிளே ஆஃப்க்கு அழைத்துச் சென்ற தோனி மீண்டும் கேப்டனாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. எனவே, கடந்த காலங்களைப் போல சவால்களை எல்லாம் கடந்து சென்னை அணி மேஜிக் செய்து பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லுமாக என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










