நான் சர்வாதிகாரியாக மாறுவேன்- முதலமைச்சர் எச்சரிக்கை

போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோகும் நபர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட…

போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோகும் நபர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் போதைப்பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்துக்குள் போதைப் பொருட்கள் நுழையாமல் தடுப்பது, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல் குறித்து ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுவிலக்கு அமலாக்க பிரிவுடன் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு இணைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு விரைவில் அரசாணை வழங்கப்படும். போதைப்பொருள் தலைப்பில் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது எனவே இதற்காக தனியாக ஒரு சைபர் செல் உருவாக்கப்படும்.

காவல் துறையில் உள்ளவர்கள் தவறு செய்யக்கூடாது என திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன். ஒரு சமுதாயத்தையே சீரழிக்கின்ற போதைப் பொருள் பயன்பாட்டிற்கு துணை போகக்கூடாது. இதை விளையாட்டாக சொல்லவில்லை என்னை soft முதலமைச்சர் என யாரும் கருதி விட வேண்டாம்.

போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போகும் நபர்களுக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் அதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டுக்குள் போதைப் பொருள் அறவே கூடாது. அந்த இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.