நடிகை ராதிகா நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ’தாய் கிழவி’. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தாய்கிழவி படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் தயாரிப்பாளரரான சிவகார்த்திகேயன்
”நம்மை நாம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது முக்கியமான விஷயம். பிரச்னைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். அதற்கிடையே தான் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த படத்தின் மூலம் பொறுப்புணர்வு கூடியிருக்கிறது.
என் அம்மா, அக்கா, மனைவி ஆகியோரை பவுனுத்தாய் கதாபாத்திரம் நினைவூட்டியது. சிறிய வருமானத்தை கூட சேமித்து அதை பெரிதாக்கும் அம்மா, அக்கா, மனைவி என அனைத்து பெண்களுக்கும் இந்த படம் சமர்ப்பணம். இந்த படத்தில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்தின் இருந்து கற்றுக் கொண்டதை வைத்தே இனி என் படங்களில் நடிக்கப்போகிறேன். அதற்காக இயக்குநரின் முடிவுகளில் தலையிட மாட்டேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தாய் கிழவி பட ப்ரிவியூ காட்சியை பார்த்து முடித்தவுடன் இயக்குனர் சிவகுமார் முருகேசனின் தந்தை என்னையும் , சிவகுமாரையும் கட்டிப்பிடித்தார். அந்த தருணத்தில் என் தந்தை நினைவுக்கு வந்தார். என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக் கொண்டேன்” எனக்கூறி கண் கலங்கினார்.







