திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழ் நடிகர்-நடிகைகள் வருவாய் பகிர்வு முறையில் (ரெவின்யூ ஷேர்) நடிக்க முன்வர வேண்டும், தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் இதுதொடர்பாக பேசிக்கொள்ளலாம் என்று நடிகர் சங்கம் தெரிவித்தது. ஆனாலும் உடனடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும், இல்லையென்றால் திட்டமிட்டபடி மே 2-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடக்கும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை திட்டமிட்டபடி முன்னெடுக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் கூறும்போது, “அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு திரைப்படம் தோல்வியடையும்போது, அந்த படத்தில் நடித்த நடிகர் தயாரிப்பாளருக்கு உடனடியாக அடுத்த படம் நடித்துக்கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறார். இயக்குனரும், தயாரிப்பாளரை அணுகி பேசுகிறார். தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் நடிகர்கள் பங்குகொள்கிறார்கள். தமிழ் சினிமாவிலும் அந்த நிலை வரக்கோரி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துகிறோம்’ என்றார்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆர்.கே.செல்வமணி தலைமையிலான தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் (பெப்சி) ஆதரவு தந்துள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு உள்பட திரைப்படம் சம்பந்தமான எந்த பணிகளும் நடைபெறாது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்த அறிவிப்பால் இன்று உள்ளூர், வெளியூர் சேர்த்து 35க்கு அதிகமான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.