”போலீஸ் மிரட்டியதால் தான் அவ்வாறு கூறினேன்”- உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷின் வாக்கு மூலத்தால் பரபரப்பு…..!

மானாமதுரையில் உயிரிழந்த விசாரணை கைதி ஆகாஷின் வாக்கு மூலம் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் டெல்சன் என்ற வாலிபர், அரிவாளால் இரண்டு பேரை வெட்டிய சம்பவம்  தொடர்பாக கடந்த 6ஆம் தேதி போலிசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது தப்பிக்க முயன்ற ஆகாஷிற்கு கால்முறிவு ஏற்பட்டதால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து ஆகாஷின் உயிரிழப்புக்கு காரணம் போலீசார் தாக்கியதே  என்று கூறி ஆகாஷின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக ஆகாஷ் காவல் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 07.03.2026 அன்று மானாமதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம். அஃப்சல் பாத்திமா பதிவு செய்த ரிமாண்ட் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள ஆகாஷின் வாக்குமூலத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிமாண்ட் அறிக்கையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷை நேரில் சந்தித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஆகாஷின் வலது காலில் தொடை முதல் பாதம் வரை பெரிய அளவில் மாவுக்கட்டு (POP Bandage) போடப்பட்டிருந்ததாகவும், அவர் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், ”06.03.2026 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் கிளங்காட்டூரில் எனது நண்பர் குணாவுடன் இருந்தபோது சீருடையில் இல்லாத காவல்துறையினர் என்னை பிடித்து அழைத்துச் சென்றனர்.

பின்னர் மாலை நேரத்தில் எனது கண்ணைக் கட்டி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், எனது காலை இரண்டு கற்களுக்கிடையில் வைத்து, ஈரச் சாக்கைப் போட்டு இரும்புக் கம்பியால் பலமாக அடித்ததாகவும், இதனால் எனது வலது கால் எலும்பு முறிந்தது.

பின்னர் என்னை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், “பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டது” என்று கூற வேண்டும் என மிரட்டியதால் அவ்வாறு கூறினேன். கண்கள் கட்டப்பட்டிருந்ததால் யார் தாக்கினர் என்பது தெரியவில்லை” என்று ஆகாஷ் கூறியதாக ரிமான்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.