முகம்மது நபி குறித்து விமர்சித்துப் பேசிய நுபுர் ஷர்மாவின் பேச்சைக் கண்டித்த நீதிபதிகளுக்கு தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திர சேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் முகம்மது நபியை விமர்சித்துப் பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழக்குகள் பதியப்பட்டன.
அந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்றி உத்தரவிடக் கோரி நுபுர் ஷர்மா மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா, சூர்யகாந்த் அடங்கிய அமர்வு, நுபுர் ஷர்மாவின் பேச்சு காரணமாகவே நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், எதிர்விளைவுகளுக்கு அவரே காரணம் என்றும் கூறி கடுமையாக விமர்சித்திருந்தனர்.
நீதிபதிகளின் இந்த பேச்சு வரம்பு மீறியது என முன்னாள் நீதிபதிகள் சிலர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், நுபுர் ஷர்மாவின் பேச்சு முட்டாள்தனமானது என சாடினார். நுபுர் ஷர்மாவின் பேச்சு காரணமாகவே, பல நாடுகளில் உள்ள நமது தூதர்கள் அந்தந்த நாடுகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த அவர், பாஜக செய்த தவறுக்கு நாடு ஏன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
நுபுர் ஷர்மா பேசியது தவறு என நீதிபதிகள் கூறிய பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு அவர்களுக்கு எதிராக கடிதம் எழுத வைத்தது பாஜகதான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நுபுர் ஷர்மாவுக்கு எதிராக நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு தான் தலைவணங்குவதாகத் தெரிவித்த தெலங்கானா முதலமைச்சர், தீய சக்திகளிடம் இருந்து நாட்டைக் காக்க இந்த உத்வேகத்தை நீதிபதிகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த சந்திர சேகர ராவ், முன் எப்போதும் இல்லாத அளவாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை நெருங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, தெலங்கானாவில் பெய்து வரும் கன மழையை அடுத்து அந்த மாநிலத்திற்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது. இதையடுத்து, இது குறித்து ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் சந்திர சேகர ராவ், நாளை முதல் மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.










