அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் தேசிய விருதை சமர்ப்பிக்கிறேன்: டி.இமான்

‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக தேசிய விருது பெறும் இசை அமைப்பாளர் டி.இமான், அந்த விருதை அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும்…

‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக தேசிய விருது பெறும் இசை அமைப்பாளர் டி.இமான், அந்த விருதை அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட இருக்கிறது. சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருது ’அசுரன்’ படத்துக்கும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி, கே.டி கருப்பு திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால், விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக இசை அமைப்பாளர் டி. இமான், சிறப்பு ஜூரி விருது ஒத்த செருப்பு படத்துக்காக பார்த்திபன் ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது.

இதற்காக இவர்கள் டெல்லி சென்றுள்ளனர். இந்நிலையில், இசை அமைப்பாளர் டி.இமான் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் இருந்து தற்போது தேசிய விருது பெறும் அனைவருடனும் பணியாற்றி யுள்ளேன். அவர்களோடு சேர்ந்து விருதை பெறுவது மகிழ்ச்சியான தருணம்.
“கண்ணான கண்ணே” என்ற பாடலுக்கு விருது கிடைத்து மிகவும் மகிழ்ச்சியானது, ஆனால் இது அந்த பாடலுக்கானது மட்டும் என்று கருத முடியாது, அதே வேளை நெடு நாட்களுக்கு பின் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கு கிடைத்துள்ள அங்கிகாரம் இது. இந்த பாடலுக்கான விருதை அனைத்து அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். ’அண்ணாத்த’ படத்தின் பாடல்கள் குறித்து மக்கள் தான் கூற வேண்டும், அந்தப் படத்தின் பாடல்கள் குறித்து தற்போது கூற வேறெதுவும் இல்லை. இவ்வாறு டி.இமான் தெரிவித்தார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.