புதுச்சேரியில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், மாநிலத்தில் 100% அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முயற்சியில் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெகா தடுப்பூசி…

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், மாநிலத்தில் 100% அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முயற்சியில் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 61 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் புதுச்சேரியில் 37 நபர்களுக்கும், காரைக்காலில் 11 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 12 நபர்களுக்கும் என மொத்தம் 61 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் புதுச்சேரியில் இருவர் உயிரிழந்ததையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,857 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 467 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,25,411 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,27,735 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கெனவே நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் விடுபட்டவர்களில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கோடு புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று இந்த மெகா தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கான முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு விடுபட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.