நடிகர் நாக சைதன்யா , சோபிதா துலிபாலா டேட்டிங் குறித்து தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என சமந்தா பதிலளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அதேபோல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மிகவும் சந்தோசமாக ஆரம்பித்த இவர்களின் திருமண வாழ்க்கை மிக விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்டு வந்த சில கருத்து வேறுபாடுகளால், ஒரு கட்டத்தில் பிரிந்துவிட முடிவு செய்து கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து குறித்து அறிவித்தனர். விவாகரத்துக்கு பின்னர் இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க ஆரம்பித்து சினிமாவில் மிகவும் பிசியாகிவிட்டனர்.
இந்த நிலையில், சமந்தாவுடன் விவாகரத்து ஆன ஒருவருடம் கழித்து, நாக சைதன்யா, நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்வதாக செய்திகள் வெளியாகின. அந்த நடிகை வேறு யாரும் இல்லை மணிரத்னம் இயக்கிய பொன்னின் செல்வன் படத்தில் வானதி வேடத்தில் நடித்த நடிகை ஷோபிதா துலிபாலா தான். இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த காதல் கதை வதந்தி பற்றிய செய்திகளை இருவரும் இதுவரை மறுக்கவில்லை. இதையடுத்து, இருவரும் சமீபத்தில் லண்டனுக்கு சுற்றுலா சென்று அங்கு டேட்டிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகின. இந்த நிகழ்வு குறித்து நாக சைதன்யா எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக ஆக உள்ளது. இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்ட, சமந்தாவிடம் நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டது. அந்த நேர்காணலில் விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய நடிகை சமந்தா, “யார் யாரோடு சேர்ந்து டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என கடுமையாக விமர்சித்ததாக செய்திகள் வெளியானது.
ஆனால் இதனை சமந்தா முற்றிலுமாக மறுத்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது முன்னாள் கணவரின் டேட்டிங் குறித்த எந்த கருத்தையும் தான் கூறவில்லை என மறுத்துள்ளார். தற்போது சமந்தாவின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
சமந்தாவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/Samanthaprabhu2/status/1643135242025283585?s=20
- பி.ஜேம்ஸ் லிசா











