தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் தனிமனித பரவலாக தான் உள்ளது சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும்
ஓமியோபதி துறை சார்பில் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து
கழகம் ( டாம்ப்கால்) தயாரித்துள்ள ஆறு அழகு சாதனை பொருட்களை மருத்துவ மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார். இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏடி கூந்தல் தைலம், மூலிகை ஷாம்பு,
மூலிகை கூந்தல் பொடி, மூலிகை முகப்பொலிவு பொடி, கூந்தல் தைலம் ப்ளஸ், மூலிகை
சோப் (பசுமை & வெண்மை) உள்ளிட்ட பொருள்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 175 வகையான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மூலிகை சன் ஸ்கிரீன், செறிவூட்டப்பட்ட மூலிகை தைலம், ஹேர் டை உள்ளிட்டவை விரைவில் கொண்டு வரப்படும். 4 கோடி மதிப்பீட்டில் 11 வகையான மருந்துகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். 
கொரோனா தொற்று குறித்து பேசிய அமைச்சர், நேற்று இந்திய அளவில் 3000 பேருக்கு மேல் நோய் தொற்று பரவி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 198 என்ற அளவில் பாதிப்பு உயர்ந்துள்ளது. ஓமிக்கிரானின் உருமாற்றம் அடைந்த XBB தொற்று தற்போது பரவி வருகிறது. மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று இருந்தது.
தமிழகத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி கடந்த 1ம் தேதியில் இருந்து அரசு
மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொதுமுடக்க காலகட்டங்களில் பொது சுகாதாரத் துறை சார்பில் விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அடிக்கடி கை கழுவுவது, தனிமனித இடைவெளி, உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் அவை திரும்ப பெறப்படவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு முன்பு இருந்து
சுற்றுப்புறத்தில் இருந்து பாதுகாக்க முககவசம் அணிவார்கள். காவல் துறையினர் அபராதம் விதித்து தான் முக கவசம் அணிய வேண்டும் என்று இல்லை. முக கவசம் அவசியம் என்பதை பொது மக்கள் அறிந்து செயல்பட வேண்டும். நம்மை காத்துக் கொள்ள நல்ல வழி முக கவசம் போடுவது அதனை பின்பற்றுங்கள் என்றார்.
கொரோனா தொற்று சமூக பாதிப்பாக மாறவில்லை. தனிமனித பாதிப்பு தான் இப்போது
உள்ளது. குடும்பம் முழுக்க பாதிக்கப்படுவது என்று இல்லை. தொற்று பாதிக்கப்படுபவர்களும் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட வேண்டிய சூழல் எதுவும் ஏற்படவில்லை. அதனால் பயம் கொள்ள தேவையில்லை.
வரும் 10 மற்றும் 11 தேதிகளில் மத்திய அரசு சார்பில் மருத்துவ கட்டமைப்பு தயாராக இருக்கிறதா என்று ஒரு திட்டத்தை தொடங்க சொல்லி இருக்கிறார்கள். அன்றைய தினம் ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளோம் என்று கூறினார்.







