ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்கை நேரில் சந்தித்த ராஜமௌளி அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு “ கடைசியாக கடவுளை சந்தித்து விட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது எனப்படும் அகாடமி விருதுகளுக்கான திரைப்பட தேர்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான 95வது அகாடமி விருதுகளுக்கான திரைப்படங்களில் பட்டியலில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் பல்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது கிடைத்தது. அதை தொடர்ந்து ஆஸ்கரிலும் இத்திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர் விருது கிடைக்கும் என்ற உறுதியோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் இயக்குனரும் ஜிராசிஸ் பார்க், லின்கன் மற்றும் வெஸ்ட் சைட் ஸ்டோரி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஸ்பீல்பெர்கை வாசிங்டனில் வைத்து ராஜமௌலி நேரில் சந்தித்தார். ஸ்பீல்பெர்க் ராஜமௌலிக்கு மிகவும் பிடித்த இயக்குனர். மேலும் அவரது தீவிர ரசிகர். அவரை சந்தித்த படங்களை ராஜமௌலி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தில் ஒரு சிறு குழந்தை கன்னத்தில் கை வைத்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்துவது போல ராஜமௌலி வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்படத்தோடு சேர்த்து “ கடைசியாக கடவுளை சந்தித்து விட்டேன் “ என எழுதியுள்ளார். இப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.







