சென்னை மாநகராட்சியில் விதி முறைகளை மீறி கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை நிறுத்தியும், சீல் வைத்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் அந்த அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டடங்களை கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீற கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
அதன்படி, சென்னையில் 15 மண்டலங்களிலும் கடந்த ஜனவரி 1 முதல் 11ம் தேதி வரை சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில் 327 உரிமையாளார்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 181 உரிமையாளர்களுக்கு கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கி குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 10 கட்டுமான இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
கட்டட அனுமதிக்கு மாறாக விதிமீறி கட்டப்பட்டுமான கட்டுமான இடங்களில் கட்டுமானப் பணியை நிறுத்த குறிப்பாணை வழங்கிய பிறகும் கட்டட அனுமதியின்படி திருத்தம் மேற்கொள்ளாத 1,124 கட்டுமான இடங்களில் கட்டுமானப் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.







