எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நனவாக்குவேன்- எடப்பாடி பழனிசாமி

மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவேன் என அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்…

மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவேன் என அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையும் படிக்கவும் : அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி!!

இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனை அதிமுக தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நடத்திய அலுவலர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் இருந்து அதிமுக பொதுச்செயலாராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வெற்றிச் சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பல்வேறு சோதனைகளை கடந்து கட்சியின் இருபெரும் தலைவர்களின் கனவை நனவாக்கும் வகையில் ஒட்டு மொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்.

அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் பொதுச் செயலாளராக என்னை அறிவித்துவிட்டார்கள். அதிமுக தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.