கேன்ஸ் திரைப்பட விழாவில் கென்னடி திரைப்படத்திற்காக கலந்து கொண்ட பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், திரைப்படத்தில் நடிக்க விக்ரமை அழைத்த போது அவர் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. இந்த முறை இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படுகின்றன. அதன்படி அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும், மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படுகின்றன.
அனுராக் காஷ்யப் 2023-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கென்னடி திரைப்படத்திற்காக தற்போது பிரான்சில் இருக்கிறார். இந்த படத்தை பற்றி அனுராக் காஷ்யப்-யிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,
”நான் இந்த படத்தை எழுதும் போது ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்திருந்தேன். அதனால் தான் படத்திற்கு கென்னடி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த விக்ரம். ஏனென்றால் நடிகர் சியான் விக்ரமின் உண்மையான பெயர் கென்னடி. அந்தப் படத்துக்கு கென்னடி ப்ராஜெக்ட் என்று பெயர். நான் அவரை இந்த படத்திற்காக அணுகினேன். ஆனால் அவர் இது குறித்து பதிலளிக்கவே இல்லை. பின் ராகுலை அணுகி படத்தை வெற்றிகரமாக முடித்தேன்.” என கூறினார்.







