”என்னிடம் எந்த எம்.எல்.ஏ-வின் ஆதரவும் இல்லை!” – கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார்

தன்னிடம் எந்த எம்.எல்.ஏ-வின் ஆதரவும் இல்லை என்றும், ஆனால் காங்கிரஸிடம் 135 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை பிடித்து ஆட்சியை…

தன்னிடம் எந்த எம்.எல்.ஏ-வின் ஆதரவும் இல்லை என்றும், ஆனால் காங்கிரஸிடம் 135 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க நேற்று எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் முதலமைச்சர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்ய முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனித்தனியாக எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் முடிவுகளை காங்கிரஸ் தலைமை அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

முதலமைச்சர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கட்சி மேலிடத்தின் அழைப்பை ஏற்று சித்தராமையா டெல்லி சென்றடைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமாரும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உடல்நிலை காரணமாக டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : நீருக்கடியில் நீண்ட நாட்கள் தங்கி உலக சாதனை – வியப்பில் ஆழ்த்தும் அமெரிக்க பேராசிரியர்…!

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னிடம் எந்த எம்.எல்.ஏ-வின் ஆதரவும் இல்லை. ஆனால், காங்கிரஸிடம் 135 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. கர்நாடகாவில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற முடிவை கட்சி தலைமையிடமே விட்டுவிடுகிறேன். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். எனக்கு எந்த பதவி கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.