அமெரிக்காவின் புளோரிடாவில் தண்ணீருக்கடியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து பேராசிரியர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
அனைவருக்குமே கடல் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கடலுக்கு அடியில் சென்று வாழவேண்டும் என்றால், பலரும் சற்று தயக்கம் காட்டுவது வழக்கம்தான். கடலுக்கு அடியில் இருக்கும் வெப்பநிலை மாற்றம், அழுத்தம் போன்றவற்றால் உடல்நலக்குறைவு ஏற்படும் சூழல் இருந்தால்கூட, அங்கிருக்கும் அமைதியும், தனிமையும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை மனதளவில் பாதிக்கக்கூடும்.
இவ்வாறு பல சவால்கள் நிறைந்த கடலுக்கு அடியில் ஒருவர் நீண்ட நாட்கள் தங்கியிருந்து உலக சாதனி நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா அடுத்த லார்கோவில் 30 அடி ஆழத்தில் ’ஜூல்ஸ் அண்டர்சீ லாட்ஜ்’ என்ற தங்கும் விடுதி அமைந்துள்ளது. இதில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தெற்கு புளோரிடாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான ஜோசப் டிதுரி தங்கியிருந்த நிலையில், தொடர்ந்து 74 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டில் இதே இடத்தில் இரண்டு பேராசிரியர்கள் 73 நாட்கள் தங்கியிருந்து உலக சாதனை படைத்திருந்த நிலையில், அந்த சாதனையை டிதுரி முறியடித்துள்ளார். முட்டை மற்றும் சால்மன் போன்ற புரதச்சத்துள்ள உணவை எடுத்து கொண்டு 74 நாட்கள் தங்கியிருந்த டிதுரி, தொடர்ந்து 100 நாட்கள் அங்கேயே தங்கியிருக்கவும் முடிவு செய்துள்ளார்.







