“பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன்” – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு!

இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்மீக போதகர் மொராரி பாபுவின் ‘ராம் கதா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என்று…

இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்மீக போதகர் மொராரி பாபுவின் ‘ராம் கதா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், தான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என்று கூறினார். 

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ராம கதை தொடர்பாக ஆன்மீக போதகர் மொராரி பாபு உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய அந்த உரையில், இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் கலந்துகொண்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்துவாக வந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழி நடத்துகிறது என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம் என்றாலும், இந்த பதவியை வகித்து கடமைகளை நிறைவேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். எனது இந்த இந்துமத நம்பிக்கை தான் நாட்டிற்காக நான் உழைப்பதற்கான தைரியத்தையும், வலிமையையும், போராடும் குணத்தையும் அளிக்கிறது என ரிஷி சுனக் தெரிவித்தார்.

இதனையடுத்து, இங்கிலாந்து நாட்டின் சவுத் ஹாம்ப்டனில் வசித்த போது தனது குழந்தைப் பருவத்தில் தனது உடன்பிறப்புகளுடன் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வந்ததை நினைவு கூர்ந்த அவர், தான் ஒரு இந்து என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த மேடையின் பின்னணியில் தங்க நிறத்தில் ஹனுமனின் உருவப்படத்தை வைத்துள்ளீர்கள். இதே போன்று, 10 டவுனிங் தெருவில் உள்ள என் மேஜையில் ஒரு தங்க விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

ராமாயணத்தையும், பகவத் கீதையையும், ஹனுமான் சாலிசாவையும் நினைவுகூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும் ராமர் எப்போதும் ஒரு உத்வேகமான நபராக இருப்பார் என்று பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

முன்னதாக மேடையில் நடந்த ஆரத்தியில் கலந்து கொண்ட பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, ஜோதிர்லிங்க ராம் கதா யாத்திரையின் புனிதப் பிரசாதமாக சோம்நாத் கோயிலில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மொராரி பாபு அவருக்கு வழங்க, பிரதமர் ரிஷி சுனக் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி, அதனை பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பேச்சு, சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.