ஓய்வு அறிவித்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளார்.
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்ப உள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஐசிசி வலைத்தளத்தில் இங்கிலாந்து அணியின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஸ்டோக்ஸ் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் முக்கிய பங்கு வகித்த ஸ்டோக்ஸ், அதற்கு பின்னதாக டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்து, ஓய்வு முடிவை வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், முதல் முறையாக உலகக் கோப்பை வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கோப்பையை இந்த ஆண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டி பல்வேறு முயற்சிகள் செய்து வரும் நிலையில், அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று பென் ஸ்டோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஓய்வு முடிவை அடுத்து, உலகக் கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







