மனைவி இறந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு ரூ.9 லட்சம் செலவில் சிலிக்கான் சிலை செய்து வீட்டில் வைத்துள்ள சிவகாசி தொழில் அதிபரின் செயல் உறவினர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷ்னல் காலனியை சேர்ந்தவர் நாராயணன்(85). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி(65) என்பவருக்கும் கடந்த 1968 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆனந்த், அம்சா, அமிர்தபானு, பாபு என்ற 4
குழந்தைகள் உள்ளனர்.
அச்சகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த நாராயணன், பின்னர் காலப்போக்கில் சொந்தமாக அச்சகம் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். மனைவியை இழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத நாராயணன், வீடு முழுவதும் மனைவி ஈஸ்வரியின் புகைப்படங்களை வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.
இதையடுத்து மனைவி ஈஸ்வரியின் உருவச் சிலையை வெண்கலத்தில் தயார் செய்ய ஆசைப்பட்ட நாராயணன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலையில் உள்ள ஒரு சிற்பியிடம், தனது மனைவியின் புகைப்படத்தை கொடுத்து ரூ.2 லட்சம் செலவில் சிலை ஒன்றை தயார் செய்துள்ளார். பின்னர் அந்த சிலையை தனது வீட்டில் வைத்து, அதற்கு பூஜையும் செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே பெங்களூருவில் உள்ள ஒருவர், சிலிக்கான் மற்றும் ரப்பரை சேர்த்து மனித உருவம் தயார் செய்து கொடுப்பதாக நாராயணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பெங்களூரு சென்ற நாராயணன் அந்த தொழில்கூடத்திற்கு சென்று மனைவியின் சிலையை தயார் செய்து கொடுக்க கேட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஈஸ்வரியின் உருவச் சிலையை தயார் செய்ய தொடங்கிய அந்த நிறுவனம், சுமார் 14 மாதங்களுக்கு பின்னர் ஈஸ்வரியின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்து கொடுத்துள்ளது.
இதனை ரூ.9 லட்சம் கொடுத்து வாங்கிய நாராயணன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மனைவி ஈஸ்வரியின் சிலிக்கான் சிலையை சிவகாசிக்கு கொண்டு வந்து, உறவினர்களை அழைத்து நினைவுநாள் சிறப்பு பூஜை செய்துள்ளார். ஈஸ்வரியின் சிலையை நேரில் கண்ட உறவினர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.








