என் வீட்டை அவர்கள் எடுத்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ஏனென்றால் அந்த வீட்டில் வசிப்பது எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவர் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் 3ம் தேதி மேல்முறையீடு செய்வதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார்.
சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இன்று முதல் முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு வருகை புரிந்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இணைந்து பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.
இதன் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் தெரிவித்ததாவது..
எனக்கு எதிராக எது நடந்தாலும் நான் நானாக இருப்பேன். வயநாடு எம்பியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் இந்த மக்களுக்காக போராடுவேன். பதில் அளிக்க முடியாத கேள்வியை கேட்டதற்காக நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.
பாஜகவின் ஒட்டுமொத்த அரசும் கௌதம் அதானியை பாதுகாக்க முயற்சிக்கிறது. பிரதமரே அதானியை பாதுகாக்கிறார். பாஜக நமது நாட்டின் ஜனநாயகத்தை தலைகீழாக மாற்றியிருக்கிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் தனது ஆடை அலங்காரத்தை மாற்றி வருகிறார். ஆனால் சாமானியர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் போராடுகிறார்கள்.
எம்பி என்பது வெறும் பதவி மட்டும்தான். பாஜக எனது பதவி, வீடு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம் அல்லது என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால் வயநாட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை அவர்களால் தடுக்க முடியாது. என் வீட்டுக்கு போலீசை அனுப்பினால் நான் பயன்படுவேன் என்று நினைக்கிறார்கள். என் வீட்டை அவர்கள் எடுத்துக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் அந்த வீட்டில் வசிப்பது எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.







