கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவான்மியூர் கலாக்ஷேத்ரா நடன கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் அடையார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உதவி பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஹரி பத்மன் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனாம்பாள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூர்த்தி, 200 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் உள்ள கல்லூரியில் தவறாக நடந்து கொண்ட ஹரி பத்மன் மீது மட்டும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகத்தை பழிவாங்க மாணவிகள் புகார் அளித்ததாக ஹரி பத்மன் கூறுவதை ஏற்க கூடாது. பெற்றோர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையை சிதைத்த ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தார்.
ஹரி பத்மன் தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக ஆஜராக மாதர் சங்கத்துக்கு உரிமை இல்லை. மாதர் சங்கத்தை இந்த வழக்கில் இணைக்க கூடாது. ஹரி பத்மன் நடன பேராசிரியராக மாணவிகளுக்கு அசைவுகளை கற்று தந்ததை பாலியல் சீண்டல்களாக தவறாக சித்தரிக்கின்றனர். நிர்வாகத்தை பழிவாங்க பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர். காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட ஹரி பத்மனை காவல்துறை விசாரணைக்கு இன்னும் எடுக்கவில்லை. மேலும், கைது செய்து 15 நாட்கள் இன்னும் முடியாத நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதித்துறை நடுவர் மோகனாம்பாள், பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







